Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அரசியல் தலையீடு உள்ள வழக்குகளுக்கு மட்டுமே அரசு அவசரம் காட்டுகிறது…!!

அரசியல் தலையீடு உள்ள வழக்குகளுக்கு மட்டுமே அரசு அவசரம் காட்டுவதாகவும் நீதிமன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதில் அரசும் அதிகாரிகளும் மெத்தனப் போக்கை கடைபிடித்து வருவதாகவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கண்டனம் தெரிவித்துள்ளது.

அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய அனுமதி வழங்கி தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தது எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் திரு கிருபாகரன், திரு புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தனி நீதிபதி உத்தரவிட்டு 500 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் அந்த உத்தரவை நடைமுறை படுத்தாததிற்கு  நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

பள்ளிகல்வித்துறைக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளில் பல உத்தரவுகள் இதை போன்று நடைமுறைப்படுத்தப் படவில்லை எனவும், 50 சதவீத வழக்குகளில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு உள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். அரசியல் தலையீடு உள்ள சில வழக்குகள் மட்டுமே துரிதப்படுத்த படுவதாகவும், இது அரசின் துறை சார்ந்த அதிகாரிகளின் மெத்தனப் போக்கையே காட்டுவதாகவும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கில் மெத்தனமாக  செயல்பட்ட புதுக்கோட்டை மாவட்ட பள்ளிக் கல்வித் துறை அலுவலருக்கு 5000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்ட நீதிபதிகள் இது தொடர்பாக தமிழக பள்ளி கல்வித்துறை செயலர் மற்றும் இயக்குனர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

Categories

Tech |