ஒவ்வொரு வருடத்திற்கான அரசு பொது விடுமுறை நாட்களையும் அதற்கு முந்திய ஆண்டிலேயே வெளியிடும் மேற்கு வங்க மாநில அரசு 2022-ஆம் ஆண்டிற்கான விடுமுறை நாட்காட்டியை அண்மையில் அறிவித்தது. அந்த அடிப்படையில் கடந்த வாரம் வெளியிடப்பட்ட மாநில அரசின் 2022ஆம் வருடத்திற்கான விடுமுறை நாட்காட்டியின்படி, மேற்கு வங்கத்தில் மொத்த பொது விடுமுறை நாட்களின் எண்ணிக்கை 48 என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் 11 ஞாயிற்று கிழமைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விடுமுறைகள் தொடர்பாக அரசு ஊழியர்கள் தெரிவித்ததாவது “கடனில் சிக்கித் தவிக்கின்ற அரசாங்கத்தால் எங்கள் அகவிலைப்படி(DA) தொகையை உயர்த்த முடியவில்லை. நாங்கள் சம்பாதிக்கும் DA தொகை மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைப்பதை விட 30 சதவீதம் குறைவாக உள்ளது. அதனால் தான் எங்களுக்கு விடுமுறைகள் மூலமாக அரசு இழப்பீடு வழங்குகிறது” என்று தெரிவித்துள்ளனர். மற்ற மாநில அரசு ஊழியர்களை போல் இல்லாமல் மேற்கு வங்க அரசு ஊழியர்களுக்கு 2022-ஆம் ஆண்டு பல பொது விடுமுறை நாட்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகிறது.
இந்த பட்டியலில் வழக்கமாக, சரஸ்வதி பூஜைக்கு அடுத்த நாள் விடுமுறை நாளாகும். ஆனால் அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தற்போது சரஸ்வதி பூஜைக்கு முந்தைய நாள் விடுமுறையாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோன்று துர்கா பூஜையை முன்னிட்டு அக்டோபர் மாதத்தில் மூன்றில் ஒரு பங்கு நாட்கள் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இவற்றில் பூஜை விடுமுறைகள் செப்டம்பர் 30-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 10-ஆம் தேதி வரை நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.