கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. இங்கு அரசுக்கு எதிராக அரசு ஊழியர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் தெரிவிப்பதை தடுக்கும் விதமாக புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதுகுறித்து கர்நாடக மாநில பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, “அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அரசாங்கத்தைப் பற்றிய தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த சமூக வலைதளங்களை பயன்படுத்த கூடாது. அரசாங்கத்தைப் பற்றி சமூக ஊடகங்களிலும், டிஜிட்டல் ஊடகங்களிலும், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு அரசாங்கத்தை அவமானப்படுத்தும் அதிகாரிகள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் அந்த சுற்றறிக்கையில், அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடிப்பதற்கும், புத்தகங்களை வெளியிடுவதற்கும், மாநில மற்றும் மத்திய அரசின் கொள்கைகளை உயர் அதிகாரியின் அனுமதியின்றி விமர்சிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டு இருப்பதாக கர்நாடக மாநில அரசு பணி விதிகள் 2021-ஐ மேற்கோள்காட்டி குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக மாநில அரசின் நிர்வாகம் தொடர்பான கருத்துக்களை கூற அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சமூக வலைத்தளங்களை அணுக வேண்டாம் என்று கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மாநில அரசின் புதிய உத்தரவால் அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் திடுக்கிட்டு உள்ளனர்.