அரசு ஊழியர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
வேலூர் மாவட்டத்தில் உள்ள அருகதம்பூண்டி பகுதியில் சம்பத்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இளநிலை உதவியாளராக முன்னாள் ராணுவ வீரர் நலத்துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு ரீட்டா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சம்பத்குமார் ரீட்டாவிடம் தனது நண்பர்களை சந்தித்து விட்டு வருவதாக கூறி வெளியே சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வராததால் அவரது குடும்பத்தினர் சம்பத்குமாரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். இதனை அடுத்து வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே லாரி பழுது பார்க்கும் இடத்தில் மயங்கி கிடப்பதாக குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன்பின் அங்கு விரைந்து சென்ற உறவினர்கள் பலத்த காயங்களுடன் மயங்கி கிடந்த சம்பத்குமாரை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சம்பத்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வேலூர் காவல் நிலையத்தில் சம்பத்குமாரின் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் படி வழக்குபதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சம்பத்குமார் மது குடித்து கொண்டிருகும் போது அதே பகுதியில் வசிக்கும் பன்னீர்செல்வம், ஜெயக்குமார் ஆகிய இரண்டு பேர் அங்கு சென்றுள்ளனர்.
அப்போது இருவரும் மது குடிக்க இந்த இடத்திற்கு நீ எப்படி வரலாம்? என்றும் இங்கு வந்து தான் மது குடிக்க வேண்டுமா? என்றும் சம்பத்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கோபமடைந்த இரண்டு பேரும் சம்பத்குமாரை சரமாரியாக அடித்து கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடியது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதன்பின் பன்னீர்செல்வம் மற்றும் ஜெயக்குமார் ஆகிய இரண்டு பேரையும் காவல்துறையினர் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.