அரசு பெண் ஊழியரிடம் நகை பறித்த வழக்கில் மேலும் ஒரு வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தச்சநல்லூர் பகுதியில் சுப்பு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவி என்ற மனைவி உள்ளார். இவர் நாகர்கோவிலில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தேவியும் அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒரு பெண்ணும் அப்பகுதியில் உள்ள கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தனர். இதனையடுத்து மேம்பாலம் அருகில் வந்து கொண்டிருந்தபோது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் தேவியின் கழுத்தில் கிடந்த கவரிங் நகையை தங்கம் என நினைத்து பறித்துச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து தேவி நெல்லை டவுன் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மேகளிங்கபுரம் பகுதியில் வசிக்கும் மகாராஜன், மணிகண்டன் ஆகிய 2 பேரை ஏற்கனவே கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய பாளையங்கோட்டை திருமால் நகர் குடிசை மாற்று வாரிய பகுதியில் வசிக்கும் பலவேசம் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.