கேரள மாநிலத்தில் முதலமைச்சரான பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெற்று வருகின்றது. இவர் தலைமையிலான அரசு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களுடன் தொடர்பில் உள்ள அரசு ஊழியர்களுக்கு ஒரு வாரத்திற்கு சிறப்பு விடுமுறை அளிக்கும் திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து கடந்த வாரம் கேரள மாநில அரசு அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இந்தக் கூட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பு விடுமுறையை ரத்து செய்வது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கான காரணம் என்னவென்றால் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நபர்களுடன் தொடர்பில் உள்ள அரசு ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கினால் அரசு நிர்வாகத்தில் பிரச்சனை ஏற்படும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நபருடன் தொடர்பில் இருக்கும் அரசு ஊழியர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், அரசு அலுவலகத்திற்கு வரும்போது N 95 முககவசம் அணிந்து வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு கொரோனா அறிகுறி இருந்தால் சுகாதாரத்துறை அறிவுறுத்தல் படி மேல்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.