ஊரடங்கு நேரத்தை பயன்படுத்தி அரசு பள்ளியில் கைவரிசை காட்டிய திருடர்கள்…!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே P.புதுப்பட்டி என்ற ஊரில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டுவருகிறது. இதில் சுமார் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் பள்ளி வளாகம் அனைத்தும் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது.
ஊரில் இருந்து சற்று ஒதுக்குப்புறமாக காட்டுப் பகுதியில் அமைந்திருக்கும் இந்த பள்ளியில் இருந்த பொருட்களை கொள்ளையடிக்க ஒரு கும்பல் அதற்காக திட்டத்தை தீட்டி இருக்கிறது. சில நாட்கள் பள்ளிக்கு விளையாட செல்வது போன்று நோட்டமிட்ட கொள்ளைக் கும்பல் மாணவர்கள் பள்ளி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுவதால் திருட முடியாது எனத் திட்டமிட்டு இரவில் திருடன் செல்ல முடிவெடுத்துள்ளனர்.
அந்த கும்பல் பள்ளியில் உள்ள கணினி அறை, ஆசிரியர்கள் அறை மற்றும் தலைமை ஆசிரியர் அறை போன்ற அறைகளில் இருந்த கம்ப்யூட்டர்கள், லேப்டாப்கள் போன்றவைகளை இரவோடு இரவாக திருடி சென்றுள்ளனர். மேலும் 9 பீரோக்கள் உடைக்கப்பட்டு உள்ளே ஏதேனும் பணம் இருக்கிறதா என்று தேடி இருக்கின்றனர். இரண்டு நாட்களுக்கு பிறகு பள்ளிக்கு வருகை தந்த ஆசிரியர்கள் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து காரியாபட்டி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர்.
மோப்ப நாய் உதவியுடன் சம்பவ இடத்திற்கு சென்ற காவலர்கள், நிபுணர்களின் உதவியுடன் ஆதாரங்களை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுமார் இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டிருப்பதை கண்டு ஆசிரியர்களும் அப்பகுதியினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த திருட்டு சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.