அரசு பேருந்து-லாரி நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள அய்யம்பேட்டை பகுதியிலிருந்து வந்து கொண்டிருந்த அரசு பேருந்தும், சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்த லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி மற்றும் ஓட்டுநரின் அருகாமையில் இருக்கும் இரும்பு கம்பி பலத்த சத்தத்துடன் உடைந்து கீழே விழுந்துள்ளது. அப்போது பேருந்தில் இருந்த பயணிகள் பயத்தில் சத்தம் போட்டு அலறி உள்ளனர்.
இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக பேருந்தில் பயணம் செய்த பயணிகளுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. இதனையடுத்து காயமடைந்த பேருந்து ஓட்டுனரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.