அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வண்ணார்பேட்டை அரசு போக்குவரத்து கழக அலுவலகம் முன்பு அரசு போக்குவரத்து கழக சி.ஐ.டி.யு. தொழிலாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் சங்க தலைவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த போராட்டத்தை மாநில குழு உறுப்பினர் பெருமாள் தொடங்கி வைத்து பேசினார். இதனையடுத்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து சம்மேளன பொதுச் செயலாளர் ஆறுமுகநயினார் பேசினார்.
அதில் அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தை உடனே நடத்த வேண்டும் எனவும், சட்டப்படி குறைந்தபட்ச கூலி மற்றும் தீபாவளி போனஸ் 25% வழங்க வேண்டும் எனவும் கூறினார். மேலும் அகவிலைப்படி உயர்வு நிலுவையை வழங்க வேண்டும் எனவும், ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன் அகவிலைப்படி உயர்வு மருத்துவ காப்பீடு உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பொது செயலாளர் ஜோதி, துணைத்தலைவர் வன்னியபெருமாள், குழு உறுப்பினர்கள், துணை பொது செயலாளர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.