குஜராத் மாநிலத்திலுள்ள அகமதாபாத் ஜமால்பூரின் கீதா மந்திர் எஸ்டி பஸ் நிலையம் அருகில் முனிசிபல் கார்ப்பரேஷன் அலுவலகம் இருக்கிறது. இங்கு நிறுத்தப்பட்டு இருந்த சுகாதார அலுவலரின் அரசு வாகனம் திடீரென திருட்டு போனது. இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
அதன்பின் சாஹில் மக்சுத்கான் பதான் என்பவரை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது. அதாவது, கைதான பதான் வாகனம் திருட்டு போன அதே அரசு அலுவலகத்தின் முன் பிச்சை எடுத்து வந்தவர். இதற்கிடையில் பதான் அந்த அரசு வாகனத்தை வதோதரா வரை திருடிச் சென்றுள்ளார்.
பின் வாகனத்தில் இருந்த டீசல் காலியாகி உள்ளது. அப்போது கையில் பணமில்லாததால் காரை அங்கேயே நிறுத்திய பதான், மீண்டுமாக அகமதாபாத்துக்கே திரும்பி வந்துள்ளார் என காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் கைதான பதான் மீது வேறு எதாவது குற்றவழக்குகள் இருக்கிறதா என்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.