Categories
மாநில செய்திகள்

சிலிண்டர் நிறுவனங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக பின்பற்றப்படுகிறதா?:ஆய்வு செய்ய ஐகோர்ட் அறிவுரை!

சிலிண்டர் டெலிவரி பணியாளர்களை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் பின்பற்றப்படுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும் என எண்ணெய் நிறுவனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. எரிவாயு சிலிண்டர் டெலிவரி செய்யும் பணியாளர்களுக்கு ரூ.25 லட்சம் காப்பீடு செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவிடக்கோரி தமிழ்நாடு எல்பிஜி சிலிண்டர் டெலிவரி பணியாளர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

அந்த மனுவில் சிலிண்டர் டெலிவரி செய்யும் பணியாளர்களுக்கு தேவையான முகக்கவசம், கிருமிநாசினி, கையுறை போன்றவற்றை வழங்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது இந்தியன் ஆயில் பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அந்த பதில் மனுவில் கிடங்குகளில் சிலிண்டர் நிரப்புவது மற்றும் டெலிவரி செய்வது போன்ற பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு தேவையான கிருமி நாசினி, முகக்கவசம், கையுறை ஆகியவற்றை வழங்கவேண்டும் என அனைத்து விநியோகஸ்தர்களுக்கும் அறிவுரை வழங்குயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பணியாளர்களுக்கு மருத்துவ செலவிற்காக ரூ.1 லட்சம் ரூபாய் காப்பீட்டு தொகையும், ஒருவேளை மரணம் ஏற்பட்டால் அவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் கருணை தொகையும் வழங்க வேண்டும் என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அறிவுறுத்தியிருப்பதாகவும், அதற்கான ஒப்பந்தத்தில் அனைத்து விநியோகிஸ்தர்களும் கையெழுத்திட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க தேவையில்லை என தெரிவித்த நீதிபதிகள் இந்த வழக்கை முடித்து வைத்தனர். மேலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக பின்பற்றப்படுகின்றனவா? என்பதை அவ்வப்போது திடீர் ஆய்வு மேற்கொள்ளவேண்டும் என எண்ணெய் நிறுவனங்களுக்கு நீதிபதிகள் அறிவுரை வழங்கி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளனர்.

Categories

Tech |