தொழிலதிபர்களுடன் காணொலி மூலம் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
தலைமை செயலகத்தில் இருந்து தொழிலதிபர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி காணொலி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் சில தொழிற்சாலைகளை படிப்படியாக அனுமதிப்பது, கொரோனா பரவாமல் இருக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் பழனிசாமி காணொலியில் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,629 ஆக அதிகரித்துள்ளது என தமிழக சுகாதாரத் துறை தகவல் அளித்துள்ளது. இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உள்ளது. அதேபோல தமிழகத்தில் இன்று 27 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 662 ஆக அதிகரித்துள்ளது. அதாவது கொரோனா பாதித்த 40.63% நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
நாடு முழுவதும் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கின் போதும் சில தொழில்களுக்கு அனுமதி அளிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதுகுறித்து மாநில அரசுகள் முடிவு எடுத்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனினும் தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து முடிவு எடுக்க குழு அமைத்து ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த நிலையில், தொழிலதிபர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி காணொலி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை நிறைவடைந்த பின்னர் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.