விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் தவறி கிணற்றுக்குள் விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்திலுள்ள சிறுகளத்தூர் பகுதியில் ராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு வெண்ணிலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் ராஜ் தனது மனைவி மற்றும் மகன்களுடன் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து ராஜியின் மூத்த மகனான ராகவன் தனது பாட்டி வீட்டிற்கு பக்கத்தில் விளையாடிக்கொண்டிருந்தார்.
அதன்பின் விளையாடிக்கொண்டிருந்த ராகவன் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வராததால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் ராகவனை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் ராகவன் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ராகவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அப்பகுதியில் இருக்கும் பவுனம்மாள் என்பவரின் வீட்டின் பின்புறத்தில் அமைந்துள்ள கிணற்றில் சிறுவன் தவறி விழுந்து இருப்பானோ என்ற அச்சத்தில் விரைந்து சென்று பார்த்துள்ளனர்.
இந்நிலையில் ராகவனின் உறவினர்கள் முனையில் அறிவாள் கட்டப்பட்ட நீண்ட கம்பிணை கிணற்றுக்குள் விட்டு தேடிப் பார்த்தபோது ராகவனின் சட்டை அந்த அரிவாளில் மாட்டிக்கொண்டு வெளியே வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக கிணற்றுக்குள் குதித்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த ராகவனை சடலமாக மீட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராகவனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.