அரியர் தேர்ச்சி கிடையாது என்று அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அண்ணா பல்கலைக்கு எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது.
தமிழக அரசு அரியர் மாணவர்களை தேர்ச்சி அடைய செய்து அண்மையில் உத்தரவிட்டிருந்தது. இதன் காரணமாக லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுதாமல் தேர்ச்சி அடைய கூடிய ஒரு நிலை இருந்தது. இந்த நிலையில் பொறியியல் கல்லூரிகளுக்கான தலைமை அமைப்பான அகில இந்திய தொழில்நுட்ப அமைப்பு அண்ணா பல்கலைக் கழகத்திற்கு கடிதம் எழுதி இருந்தது. அதில் எந்தவிதமான தேர்வு முறையும் இல்லாமல், அரியர் மாணவர்களை தேர்ச்சி அடைய செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தலைவர் இந்த கடிதத்தை எழுதி இருந்தார்.
மேலும் எந்த தேர்வு முறையும் இல்லாமல் தேர்வு செய்தது ஏற்க முடியாது என்றும், அண்ணா பல்கலைகழகத்தின் அதிகாரம் அதன் விதிகளை மீறி செயல்பட்டால் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் இப்படியான எந்த கடிதம் எதுவும் தமிழக அரசுக்கு வரவில்லை என்று அமைச்சர்கள் தொடர்ந்து மறுத்து வந்த நிலையில், தற்போது ஏஐசிடிஇ அனுப்பிய கடிதம் வெளியாகி இருக்கிறது. இதனால் மாணவர்கள் தேர்ச்சியா இல்லையா என்ற குழப்பமான மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.