திருவள்ளுவர் சிலைக்கு அர்ஜுன் சம்பத் காவித்துண்டு போட்டு பூஜை செய்த வீடியோ சமூக வளையதளத்தில் வைரலாகி வருகின்றது.
கடந்த சில நாட்களாகவே திருவள்ளுவர் அணிந்து இருப்பது வெள்ளை நிற ஆடையா ? அல்ல காவி நிற ஆடையா ? என்று கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு விவாதங்களும் நடைபெற்று வரும் சூழ்நிலையில் தஞ்சை பிள்ளையார்பட்டி திருவள்ளுவர் நகரில் உள்ள திருவள்ளுவர் சிலையில் சாணத்தை பூசி மர்ம நபர்கள் அவரை அவமதிப்பு செய்துள்ளனர். இது அந்தப் பகுதியில் ஒரு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வள்ளுவர் சிலையை அவமதித்த கயவர்களை பிடிக்க போலீஸால் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
இதை கண்டித்து பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தினர். அதே போல திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் இன்று தஞ்சை பெரியகோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்பு பிள்ளையார்பட்டி வந்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் அங்கிருந்த திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு திருநீறு மற்றும் ருத்ராட்சம் மாலை அணிவித்தார்.
பின்னர் சூடம் ஏற்றிய அர்ஜுன் சம்பத் வள்ளுவர் சிலைக்கு தீபாதரனை காட்டினார். அப்போது அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு என்ற குறளை பாடிக்கொண்டு பூஜை போட்டார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் , அர்ஜுன் சம்பத் செய்த இந்த செயல் பெரும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது.