டேபிள் டென்னிஸ் போட்டிகளில் ஜொலிக்கும் இந்திய வீரர் சத்யன் ஞானசேகரன். 27 வயதாகும் இவர் உலக டேபிள் டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் 30ஆவது இடம் வகிக்கிறார்.
சமீபத்தில் இவர் கிரன்வெட்டர்ஸ்பேச் டிஷ்டென்னிஸ் கிளப் அணிக்காக ஜெர்மன் கோப்பைத் தொடரில் பங்கேற்றார். இந்த கிளப் அணி யாரும் எதிர்பாராத வகையில் கோப்பையைக் கைப்பற்றி அசத்தியது.
இவர் நமது ஈ டிவி பாரத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில், ” எங்கள் கிளப் அணிக்கு இது மிகப்பெரிய வெற்றி. அந்த தொடரில் எங்கள் கிளப் அண்டர் டாக்ஸ் அணியாக பங்கேற்றாலும், அந்தத் தொடரின் சிறந்த அணியை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியுள்ளோம். அதனால் இந்த வெற்றி கொஞ்சம் தனித்துவமானது.
எனக்கு பிடித்த நிமிடம், அரையிறுதியில் சீன வீரரை வீழ்த்தியது. இதுவே எனது சிறந்த ஆட்டமாக இருந்தது.
சீனியர் வீரர் ஷரத் கமலோடு ஒப்பிட்டபோதும் எனக்கு பெரிதாக ப்ரஷர் ஏற்படவில்லை. நான் எனது ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்தினேன்.
சிறுவயதிலிருந்தே ஒலிம்பிக்கில் பங்கேற்கவேண்டும் என்பது எனது கனவு. ஒலிம்பிக் தொடருக்கு முன்னதாக ஆசியத் தொடர், ப்ரோ லீக் போட்டிகளில் ஆடவுள்ளேன்.
அதனால் இந்த ஆண்டு நடக்கும் டோக்யோ ஒலிம்பிக் போட்டிகளில் நிச்சயம் பங்கேற்பேன் என்ற நம்பிக்கை உள்ளது.
இந்திய டேபிள் டென்னிஸ் அணி ஒலிம்பிக் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை செக் குடியரசு அணியிடம் அடைந்த தோல்வியால் பறிகொடுத்துள்ளது.
இந்தத் தோல்விக்கு யாரையும் காரணம் சொல்லமுடியாது. ஏனென்றால் முழு நேர பயிற்சியாளர் இல்லாமல் ஒலிம்பிக் போன்ற தொடர்களுக்கு தகுதிபெறுவது என்பது இயலாத காரியம்.
ஆனாலும் கடந்த இரு ஆண்டுகளாக பயிற்சியாளர் இல்லை என்றாலும், இந்திய அணியின் செயல்பாடுகள் சிறப்பாகவே உள்ளது.
தவறுகளில் இருந்து பாடம் கற்றுள்ளோம். சீன வீரர்களுடன் இந்திய வீரர்களை ஒப்பிடக்கூடாது. சீனாவில், சிறுவயதிலிருந்தே விளையாட்டிற்கு தயார்படுத்தப்பட்டு வருகிறார்கள். ஆனால் இந்தியாவில் அவ்வாறு இல்லை.
கடந்த சில வருடங்களாக இந்திய விளையாட்டைப் பொறுத்தவரை இந்தியாவின் எதிர்காலம் வளர்ச்சிப் பாதையில் இருக்கிறது.
அல்டிமேன் டேபிள் டென்னிஸ் தொடரின் மூலம் இந்திய டேபிள் டென்னிஸ் வீரர்களுக்கு உற்சாகம் ஏற்பட்டுள்ளது.
இந்தத் தொடரால் டேபிள் டென்னிஸ் வீரர்களுக்கு என ஒரு இலக்கு உண்டாகியுள்ளது. முதல் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் சீசன் தொடரில் நான் சில முன்னணி வீரர்களை வீழ்த்தியதால் எனது ஆட்டமும், மன உறுதியும் முன்னேறியது. அதனால் ட்ஹ்டொஅர்ந்து அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்பேன்” என்றார்.