புதுக்கோட்டை மாவட்டம் அருகே சிறிய ரக ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
செங்காளம் வைந்தலூர் வான் பகுதியில் பறந்துகொண்டிருந்த ஹெலிகாப்டர் வெடித்துச் சிதறியது என கூறப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டம் திருப்புனவாசலை அடுத்துள்ள பேயடிக்கோட்டை கிராமத்தின் அருகே செங்காளம் வைந்தலூரில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. ராணுவத்திற்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் இன்று புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் எல்லையில் பறந்து சென்றுகொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் 6 பேர் பயணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பயணித்தவர்களின் நிலைமை குறித்து இதுவரை தகவல் இல்லை. கீழே விழுந்த ஹெலிகாப்டர் கடந்த அரைமணி நிறமாக தீ பிடித்து எரிந்து கொண்டிருக்கிறது. விபத்து குறித்து தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறை அதிகாரிகள் விரைந்துள்ளனர்.
மேலும், விபத்து நேர்ந்ததன் காரணம் குறித்து இன்னும் தெரியவில்லை. இந்த ஹெலிகோட்டர் காட்டுப்பகுதியில் விழுந்ததால் மக்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. விபத்து நடந்த இடத்தில் உள்ளூர்வாசிகள் குவிந்ததால் பரபரப்பு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.