காஞ்சிபுரத்தில் கணவன்-மனைவி தகராறில் ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வன்னியர் பேட்டை பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வந்தார். இவர் ஒடிசாவில் இந்திய ராணுவ வீரராக பணியாற்றி வந்துள்ளார். இவருடைய மனைவி நதியா. இவர்களுக்கு சோம்நாத், ஜெகத்ரட்சகன் என்ற மகன்கள் உள்ளனர். செந்தில்குமார் சென்ற 15 நாட்களுக்கு முன் விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது கணவன், மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த நதியா தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இச்சம்பவத்தால் மனவேதனை அடைந்த செந்தில்குமார் வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் குடிபோதையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாலாஜாபாத் காவல்துறையினர் ராணுவ வீரர் செந்தில்குமாரின் உடலை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.