திருவாரூர் மாவட்டம் அத்திக்கடையைச் சேர்ந்த 34 வயதுடைய கொ. சர்புதீன் என்பவர் நேற்று தன்னுடைய வீட்டை பூட்டிவிட்டு அத்திக்கடையிலுள்ள மற்றொரு தெருவில் வசிக்கும் தனது உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தார். பின்னர், நேற்று மாலை மீண்டும் வந்து பார்த்த போது வீட்டுக் கதவின் பூட்டு மற்றும் பீரோக்களின் கதவுகள் உள்ளிட்டவை உடைக்கப்பட்ட நிலையில் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து, கொரடாச்சேரி போலீசாருக்கு சர்புதீன் அளித்த தகவலின் பேரில், அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு நடத்தினர்.. அப்போது, பீரோவிலிருந்த 220 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.7 லட்சம் ரூபாய் ரொக்கம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை, சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.. இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கொரடாச்சேரி போலீசார், அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும், சர்புதீன் வீட்டிற்கு எதிரில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றது.. ஆகவே கட்டடத்துக்கு வேலைக்கு வந்து செல்லும் தொழிலாளர்கள் உட்பட அப்பகுதியிலுள்ள அனைவரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மர்மநபர்கள் கொள்ளையடித்துச்சென்ற 220 சவரன் தங்க நகைகள் தன்னுடைய மனைவி மற்றும் சகோதரிகள் ஆகியோரது நகைகள் என்றும், 7 லட்சம் ரூபாய் ரொக்கம் வீடு கட்டுவதற்காக வைத்திருந்ததாகவும் சர்புதீன் மிகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால், இந்தத் திருட்டில் வெளியூர் நபர்கள் ஈடுபட வாய்ப்புகள் குறைவு என்றும், உள்ளூர் நபர்களே இந்தக் கொள்ளையில் ஈடுபட்டிருக்கக் கூடும் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் அத்திக்கடை பகுதி முழுவதும் போலீசாரின் தீவிர கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டுள்ளது.