பிரதமர் மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடி திட்டங்கள் தொடர்பான விரிவான அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார்.
நேற்று இரவு 8 மணிக்கு மக்களிடையே உரையாடிய பிரதமர் மோடி, ” ‘ஆத்மநிர்பர் பாரத் அபியான்’ அதாவது தன்னிறைவு பெற்ற இந்தியா திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தை மீட்கும் வகையில் ரிசர்வ் வங்கி மூலம் 20 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது என தெரிவித்திருந்தார். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், ” பொருளாதாரத்தை மீட்டெடுக்க பிரதமர் மோடி நேற்று ரூ.20 லட்சம் கோடி சிறப்பு நிதித் தொகுப்பு அறிவித்தார். நாட்டின் பல்வேறு துறையினரோடு ஆலோசனை நடத்திய பின், நிதி தொகுப்பு குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
பொருளாதாரம், உள்கட்டமைப்பு, மக்கள் தொகை, அமைப்பு முறை மற்றும் தேவை என்ற 5 தூண்கள் நாட்டிற்கு அவசியம் என அவர் கூறினார். பிபிஇ கிட்டுகள், வென்டிலேட்டர்கள் உள்ளிட்ட மருத்துவ பொருட்கள் உற்பத்தியின் வேகம் அதிகரித்துள்ளது என தெரிவித்தார். உள்ளூர் நிறுவனங்களை உலகளாவிய நிறுவனங்களாக மாற்றுவதே மோடி அரசின் முக்கிய நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.
மின்சார துறையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களால்,மின்மிகை நாடாக இந்தியா மாறியுள்ளது என குறிப்பிட்டுள்ளார். ஜன்தன், ஆதார் மூலம் பயனாளிகளுக்கு நிவாரணம் நேரடியாக செல்வதன் மூலம் புரட்சி ஏற்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார். 41 கோடி பயனாளிகளுக்கு ரூ.52,000 கோடி மதிப்பிலான நிவாரண உதவிகள் நேரடியாக வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். 6.5 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 71,000 டன் உணவு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டள்ளது.