தமிழகத்தில் 97.54% மக்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என உணவுத்துறை செயலாளர் தயானந்தா கட்டாரியா தெரிவித்துள்ளார்.
உணவுத்துறை செயலாளர் தயானந்தா கட்டாரியா மற்றும் வேளாண்துறை செயலாளர் ககன்தீப் சிங் கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது, விவசாயிகளிடம் இருந்து 1.26 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், செடிகளில் கருகிய 35,000 மெட்ரிக் டன் பூக்களை சென்ட் ஆலைகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் கேட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ள அவர்கள், தமிழகத்தில் காய்கறி, பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை என்றும் 1,300 மினி லாரிகள் மூலமாக காய்கறி விநியோகம் செய்யப்படுவதாகவும், 1,100 தள்ளுவண்டிகள் மூலமும் பல்வேறு இடங்ளில் காய்கறி விநியோகம் செய்யப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளனர்.
மேலும் 20க்கும் மேற்பட்டோர் குடியிருக்கும் பகுதிகளில் இருந்து அழைப்பு வந்தால் நேரடியாக காய்கறி விநியோகம் செய்யப்படும் என்றும் அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றத்தை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் அளித்துள்ளனர்.
தமிழகத்தில் 97.54% மக்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகவும், விடுபட்டவர்கள் வரும் 30ம் தேதி வரை நிவாரண உதவித் தொகையை பெற்றுக்கொள்ளலாம் என்றும் உணவுத்துறை செயலாளர் தயானந்தா கட்டாரியா கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏதும் இல்லை என்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.