Categories
மாநில செய்திகள்

அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆய்வகங்களை பொதுமக்கள் பார்வையிட ஏற்பாடு

கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆய்வகங்களை வரும் 15ஆம் தேதி பொதுமக்கள் மாணவர்கள் கண்டுகளிக்கலாம் என பல்கலைக்கழக பதிவாளர் கருணாமூர்த்தி தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் குருஷேத்ரா என்ற தொழில்நுட்ப கருத்தரங்கு நேற்று  தொடங்கியது. இந்த தொழில்நுட்ப கருத்தரங்கில் விழா மலரை அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கருணாமூர்த்தி வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து மாணவர்களின் கண்டுபிடிப்புகளை பார்த்து கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கருணாமூர்த்தி, கிண்டி பொறியியல் கல்லூரியில் நடைபெறும் குருஷேத்ரா 2020 என்ற தொழில்நுட்ப கண்காட்சி வரும் 16ஆம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறவுள்ளது. மாணவர்களால் நடத்தப்படும் இந்த விழா, அவர்கள் வேலைவாய்ப்பில் சேர்வதற்கு உந்து கோலாக அமையும்.

இதில் மாணவர்களுக்கான உலக அளவிலான தொழில் வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கு 13ஆம் தேதி நடைபெறுகிறது. தொடர்ந்து 14ஆம் தேதி மாணவர்களின் திறமையை கண்டறிந்து விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

கிண்டி பொறியியல் கல்லூரி 225ஆவது ஆண்டைக் கொண்டாடிவரும் நிலையில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கண்டுபிடிப்புகளை 15ஆம் தேதி காட்சிப்படுத்த ஏற்பாடு செய்துள்ளோம். அதேபோல் அண்ணா பல்கலைக்கழகத்தில் கிண்டி பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள ஆய்வகங்களை மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் நேரில் பார்வையிடலாம்.

காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் கண்டுகளிக்க அனுமதி வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து 16ஆம் தேதி கல்லூரி மாணவர்கள் வேலை வாய்ப்பு பெறுவதற்கான இன்டர்ன்ஷிப் ஃபேர் நடத்தப்படும் எனத் தெரிவித்தார்.

Categories

Tech |