2 வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளையடித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
திருப்பூர் மாவட்டத்திலுள்ள முதலிபாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் ஊத்துக்குளி காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் வாலிபர் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் முதலிபாளையம் ஹவுஸிங் யூனிட் பகுதியில் வசிக்கும் சூர்யா பிரகாஷ் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் அவர் கடந்த மாதம் 18-ஆம் தேதி அப்பகுதியில் வசிக்கும் பேபி மற்றும் ஹவுசிங் யூனிட் பகுதியில் வசிக்கும் ஹரிசுதன் ஆகியோர் வீடுகளில் பூட்டை உடைத்து சிலிண்டர் மற்றும் அரை பவுன் தங்க மோதிரம் ஆகியவற்றை திருடி சென்றது தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ஊத்துக்குளி காவல்துறையினர் சூர்யா பிரகாஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.