மதுபோதையில் தம்பியின் மனைவியை கத்தியால் தாக்கியவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கடுகப்பட்டு கிராமத்தில் வீரராகவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி மஞ்சுளா. இவருக்கு கோதண்டம் என்னும் அண்ணன் உள்ளார். அண்ணன் தம்பி இருவருக்கும் இடையே பல நாட்களாக சொத்து தகராறு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் கோதண்டம் மதுபோதையில் தம்பியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு வீட்டின் வாசல் முன் நின்று வீரராகவனை தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். இதனால் கோபமடைந்த வீரராகவன் மனைவி கோதண்டத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வாக்குவாதம் முற்றியதில் கோதண்டம் கையில் வைத்திருந்த கத்தியால் மஞ்சுளாவை தாக்கியுள்ளார்.
இதனால் மோசமாக காயமடைந்த மஞ்சுளா சிகிச்சைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்து அவர் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து அணைக்கட்டு காவல் துறையினர் கோதண்டம் மீது வழக்குப்பதிந்து பின் அவரை கைது செய்தனர்.