Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

வாகனத்துக்கு இ-பாஸ் பெற்றுத் தர லஞ்சம் வாங்கிய கலெக்டர் அலுவலக ஊழியர்கள் 2 பேர் கைது

வாகனத்துக்கு இ-பாஸ் பெற்றுத் தர லஞ்சம் வாங்கிய கலெக்டர் அலுவலக ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

திருவள்ளூரை அடுத்துள்ள ஈக்காட்டை சேர்ந்தவர் சதீஷ்குமார்(29).  தற்போது தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருக்கும்  நிலையில் காரில் திருப்பதிக்கு சென்று வருவதற்காக ஆன்லைன் மூலம் இ-பாஸ் விண்ணப்பித்து இருந்தார். ஆனால் அவருக்கு அனுமதி கிடைக்காததால் நேரடியாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றார்.

அப்போது கலெக்டர் அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்த சென்னை அம்பத்தூரை சேர்ந்த ஜெகதீஷ் (28), திருவள்ளூர் தண்ணீர்குளத்தைச் சேர்ந்த தினேஷ்(26) ஆகிய 2 பேரும் சதீஷ்குமாரிடம் இ-பாஸ் பெற்றுத் தருவதாக  கூறி ரூ. 2500 லஞ்சம் தருமாறு கேட்டு பெற்றுக் கொண்டனர்.

நேற்று முன்தினம் அவர் மீண்டும் கலெக்டர் அலுவலகம் சென்று  கேட்டபோது அவர்கள் 2 பேரும் கூடுதலாக பணம் கொடுத்தால் தான் இ -பாஸ் பெற்றுத்தர முடியும் என்று கூறியுள்ளனர். இதனால் சதீஷ்குமார் தான் கொடுத்த பணத்தை திரும்ப தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர்கள்  இருவரும் பணம் தர முடியாது என கூறியதுடன் சதீஷ்குமாருக்கு  கொலை மிரட்டலும்  விடுத்தனர்.

இந்த சம்பவம் குறித்து சதீஷ்குமார் கொடுத்த  புகாரின் பேரில் திருவள்ளூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் உள்ளிட்ட காவல்துறையினர்  வழக்குப்பதிவு செய்து ஜெகதீஸ் மற்றும் தினேஷ் ஆகிய இருவரையும்  கைது செய்து சிறையிலடைத்தனர்.

Categories

Tech |