வேதாரண்யத்தில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கஞ்சா கடத்த முயற்சித்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யத்திலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக தங்கம் மற்றும் கஞ்சா உள்ளிட்ட பல பொருள்கள் கடத்தப்பட்டு வந்துள்ளது. இதனை தடுக்க கியூ பிரஞ்ச் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஆனால் அதையும் மீறி தங்கம் மற்றும் கஞ்சா சட்டவிரோதமாக கடத்தப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் வேதாரண்யத்திலிருந்து கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
அந்த தகவலின் பேரில் கியூ பிரஞ்ச் காவல்துறையினர் தோப்புத்துறை பகுதி அருகில் வாகன சோதனை மேற்கொண்டு வந்துள்ளனர். அப்போது ஆம்புலன்ஸ் ஒன்று அந்த வழியாக வேகமாக வந்துள்ளது. அதை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் ஆம்புலன்சினுள் சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் பதப்படுத்தப்பட்ட கஞ்சா பொட்டலங்கள் கடத்தி செல்வது தெரியவந்தது. இதையடுத்து ஆம்புலன்சில் இருந்த நான்கு பேரிடமும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில் அவர்கள் சென்னையில் வசித்து வரும் மகேந்திரன், சுந்தர், ராஜ்குமார், வினோத் என்பதும், அவர்கள் வேதாரண்யத்தில் இருந்து இலங்கை படகிற்கு கஞ்சா கடத்துவதற்காக சென்னையிலிருந்து ஆம்புலன்ஸில் வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்த ரூபாய் 3 லட்சம் மதிப்புள்ள 28 கிலோ கஞ்சா பொட்டலங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஆகியவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர் கஞ்சா கடத்திய 4 பேர் மீதும் வழக்குப்பதிந்து பின் கைது செய்தனர்.