மயிலாடுதுறையில் சொத்து தகராறு காரணமாக கைகலப்பு ஏற்பட்டதால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அடியாமங்கலம் நடுத்தெருவில் நாராயணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாந்தா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு செந்தில்குமார் என்ற மூத்த மகனும், வெற்றிவேல், சிங்காரவேல், சரவணன் ஆகிய மகன்களும் உள்ளனர். செந்தில்குமார் திருமணம் முடிந்ததும் தனது மனைவி சத்யப்ரியாவுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் செந்தில்குமாருக்கும், அவரது சகோதரர்களுக்கும் சொத்துப் பிரச்சனை காரணமாக வாக்குவாதம் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று செந்தில்குமார் தனது உறவினர் ஒருவர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
பின் வீடு திரும்பிய அவர் வீட்டின் குளியலறை இடிக்கப்பட்ட நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் கோபமடைந்த செந்தில் குமாரின் மனைவி சத்யபிரியா செந்தில்குமாரின் குடும்பத்தினரிடம் சென்று இதுகுறித்து நியாயம் கேட்டு வாக்குவாதம் நடத்தியுள்ளார். அந்த வாக்குவாதம் முற்றி தகராறாக மாறியதில் செந்தில் குமாரின் குடும்பத்தினர் சத்யபிரியாவை மோசமாக தாக்கியதோடு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். தனது மனைவியை தாக்கிய கோபத்தில் செந்தில்குமார் தனது தாய் சாந்தாவை அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தாய் சாந்தா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் செந்தில்குமார் மற்றும் சத்யபிரியா ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் சத்திய பிரியா தன்னை தாக்கியதாக சரவணன், வெற்றிவேல், சிங்காரவேல் ஆகிய மூவர் மீதும் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து அவர்கள் மூவரையும் காவல்துறையினர்கைது செய்துள்ளனர். சொத்து தகராறில் மோதிக்கொண்டதால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.