பெரம்பலூரில் ஓட்டல் மாஸ்டரை சரமாரியாக தாக்கிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அத்தியூர் பகுதியில் கருணாநிதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருண் என்ற மகன் உள்ளார். இவர் ஓட்டல் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். அருண் சென்ற செவ்வாய்க்கிழமை அன்று பெரம்பலூர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் நுழைவு வாயில் முன்பு நின்றுள்ளார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் குடிபோதையில் வந்த 6 பேர் கட்டையை எடுத்து அருணை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அருணுக்கு மோசமாக காயங்கள் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பலூர் காவல்துறையினர் அருணை தாக்கிவிட்டு தப்பிச் சென்றவர்களில் ஒருவரை பிடித்துள்ளனர். மேலும் படுகாயமடைந்த அருண்குமாரை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் பிடிபட்ட நபரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர் துறைமங்கலம் பகுதியில் உள்ள கே.கே நகரில் வசித்து வரும் சார்லஸ் என்பவரது மகன் வினோத் என்பது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து வினோத்தை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அருண் கொடுத்த தகவலின் பேரில் நெடுவாசல் மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் ராஜேந்திரன் என்பவரது மகன் அரவிந்த், கல்பாடி வடக்கு தெருவில் வசித்து வரும் அண்ணாதுரை என்பவரது மகன் கமல்ஹாசன், சங்குப்பேட்டை ராதாகிருஷ்ணன் தெருவில் வசித்து வரும் ராஜேந்திரன் என்பவரது மகன் தமிழ்ச்செல்வன் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.