காஞ்சிபுரத்தில் காவல்துறை குறித்த அவதூறு வீடியோ பரப்பிய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியில் காவல்துறை அதிகாரிகள் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் என்பவரது மொபைல் வாட்ஸ் அப்பில் வீடியோ ஒன்று வந்தது. அதில் ஒரு வாலிபர் காவல் நிலையத்திலிருந்து கையில் இரண்டு அரிவாளுடன் வெளியில் வருவது போலவும்,
அவருக்கு பின்னால் இருந்து இரண்டு நபர்கள் நடந்து வருவது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. அது கொலை மிரட்டல் விடுப்பது போன்ற பானியில் இருப்பது தெரிந்தது. பின் உயர் அதிகாரியிடம் வீடியோ குறித்து தெரிவிக்கப்பட, அவரது உத்தரவின் பேரில் அந்த வாலிபரை போலீஸ் அதிகாரிகள் வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில்அதிகாரிகளிடம் வாலிபர் பிடிபடவே, மேற்கொண்ட விசாரணையில், காவல்துறை அதிகாரிகள் எங்கள் மீது அடிக்கடி வழக்கு பதிவு செய்ததாகவும், அதன் மீது கொண்ட ஆத்திரத்தால் அவ்வாறு வீடியோ பதிவிட்டதாகவும் தெரிவித்தார். மேலும் தனது இரண்டு நண்பர்களும் இதற்கு உடந்தையாக இருந்ததாக அவர் கூறினார். இதையடுத்து அவதூறு வீடியோ வெளியிட்டதாக கூறி அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் உடைந்ததையாக இருந்த இரண்டு நண்பர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.