பெரம்பலூரில் சட்டவிரோதமாக புகையிலை மூட்டைகளை கடத்தி சென்ற லாரி டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் பறக்கும் படை அதிகாரிகள், கண்காணிப்பு பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் காவல்துறை துணை ஆய்வாளர் குபேந்திரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவேல் ஆகியோர் தலைமையில் பறக்கும் படை அதிகாரிகள் வாலிகண்டபுரம் அருகே நேற்று முன்தினம் காலையில் வாகன சோதனை மேற்கொண்டு வந்தனர். அப்போது அங்கு மினி லாரி ஒன்று சேலத்திலிருந்து வந்து கொண்டிருந்தது. அதனை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
அந்த சோதனையில் காரில் மூட்டை, மூட்டையாக தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் கொண்டு செல்வது தெரியவந்தது. இதுகுறித்து மினி லாரியில் வந்தவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் புகையிலை பொருட்களை பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் வட்டம் வேப்பூர் அருகே உள்ள பரவாய் கிராமத்திற்கு கொண்டு செல்வதாகவும் அதனை மர்ம நபர் ஒருவர் பெற்றுக் கொள்வார் என்றும் கூறியுள்ளனர். இதையடுத்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து லாரி டிரைவர் அருள்குமார் மீது காவல்துறையினர் வழக்குப்பதிந்து பின் கைது செய்து சிறையில் அடைத்தனர்.