திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் 986 மதுபாட்டில்களை விற்பனைக்காக குடோனில் பதுக்கி வைத்திருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த ஆயக்குடி பகுதியில் மது பாட்டில்களை தனியார் குடோனில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பழனி காவல் துறையினர் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு 986 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டது.
அவை அனைத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த ஆயக்குடி 4-வது வார்டு பகுதியில் வசித்து வரும் குமார் ( 30 ) என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.