வீடு புகுந்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற 3 வடமாநில வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எம்.ஊத்துக்குளி பகுதியில் தனியார் தொழிற்சாலை அமைந்துள்ளது. அங்கு அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கணவன்-மனைவி இருவரும் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் கணவர் வேலைக்கு சென்று விட்டதால் மனைவி வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் 3 வடமாநில வாலிபர்கள் அத்துமீறி நுழைந்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் சத்தம் போட்டதும் அவர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதனையடுத்து அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் பெண்ணை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அந்த பெண் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த பல்லடம் அனைத்து மகளிர் காவல்துறையினர் வடமாநில வாலிபர்களான அமருஇஸ்லாம், அனிப்அலி, இப்ராகிம் அலி ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.