சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் பகுதியில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 15-ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற அந்த சிறுமி திரும்பி வராததால் அவரது பெற்றோர் பல்லடம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறுமியை தேடி வந்தனர். இந்நிலையில் சிறுமி பல்லடம் பேருந்து நிலையம் அருகில் வாலிபர் ஒருவருடன் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் வாலிபர் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கமுதி பகுதியில் வசிக்கும் நிதிஷ்குமார் என்பதும், மேலும் அவர் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்து வந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.