பேஸ்புக் மூலம் பழகி சிறுமியை கடத்தி சென்ற வாலிபர் போக்சோ சட்டத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் செம்பனார்கோவில் பகுதியில் 17 வயதுடைய சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். இவர் கடந்த 4ஆம் தேதி குடும்ப அட்டையில் முகவரி மாற்றம் செய்வதற்காக இ சேவை மையத்திற்கு சென்றுள்ளார். அதன்பின் அவர் வீடு திரும்பாததால் அவருடைய பெற்றோர் அக்கம்பக்கத்தினர் உறவினர் வீடுகளில் தேடியுள்ளனர். ஆனால் எங்கு தேடியும் சிறுமி கிடைக்காததால் சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் சிறுமியிடம் ஃபேஸ்புக் மூலம் பழகி வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து கடந்த 2 மாதத்திற்கு முன்பு செம்பனார்கோயில் பகுதியில் உள்ள கோயிலுக்கு ராமச்சந்திரன் அந்த சிறுமியை அழைத்துச் சென்று தாலி கட்டியுள்ளார்.
பின்னர் சிறுமியை அவரது வீட்டிற்கு அனுப்பிவிட்டு ராமச்சந்திரன் செங்கல்பட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் ராமச்சந்திரன் இ சேவைக்கு சென்ற மனைவியிடம் ஆசை வார்த்தைகளை கூறி சிறுமியை கடத்தி சென்றதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் செங்கல்பட்டிற்கு விரைந்து ராமச்சந்திரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து அவரிடம் இருந்து அந்த சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.