சென்னை சாலிகிராமம் அருகே உள்ள பாஸ்கர் காலனி மூன்றாவது தெருவில் நடிகர் செந்திலுக்கு சொந்தமான 10 அறைகள் கொண்ட கட்டடம் உள்ளது. இதை கடந்த 2013ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த சகாயராஜ் (52) என்பவர் மாதம் இரண்டரை லட்சம் ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்து “சர்வீஸ் அப்பார்ட்மெண்ட்” நடத்திவந்தார்.
இந்நிலையில் சகாயராஜ் கடந்த 6 மாதங்களாக செந்திலுக்கு வாடகை கொடுக்கவில்லை என்று தெரிய வருகிறது. மேலும் அந்த கட்டடத்தில் உள்ள ஏழு அறைகளை குத்தகை, வாடகைக்கு விட்டு சகாயராஜ் பணம் சம்பாதித்து வந்ததும் தெரியவந்தது.
இதுதொடர்பாக நடிகர் செந்தில் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை பெற்றுக்கொண்ட காவலர்கள், வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த சகாயராஜை கைது செய்தனர். சகாயராஜ் சினிமா துறையில் புரொடக்சன் மேனேஜராக பணிபுரிந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.