இந்தியாவிற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து கலை பொக்கிஷங்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் இந்தியாவின் கலை மற்றும் பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் சோழர் கால சிலைகள் உட்பட 8 பழங்கால சிலைகள் மற்றும் ஆறு ஓவியங்கள் ஆகியவை கன்பெர்ரா தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவை அனைத்தும் மீண்டும் இந்தியாவிற்கு அனுப்பப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 13 கலைப் பொருள்கள் மற்றும் சிலை கடத்தல் குற்றவாளியான சுபாஷ் கபூரிடமிருந்து வாங்கப்பட்ட சிலை என மொத்தம் 14 சிலை பொருள்கள் இந்தியாவைச் சேர்ந்தது என அருங்காட்சியகம் கண்டுபிடித்துள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவின் கூட்டு முயற்சியால் இந்தியாவிற்கு கலாச்சார ரீதியான பொருள்கள் அனைத்தையும் ஒப்படைப்பதில் பெருமைப்படுவதாகவும் இந்தியாவிற்கு சிலைகள் விரைவில் அனுப்பி வைக்கப்படும் எனவும் அந்த அருங்காட்சியகத்தின் இயக்குனர் நிக் மிட்செவிட்ச் தெரிவித்துள்ளார். மேலும் அந்த கலை பொருள்கள் ராஜஸ்தான், தமிழகம், உத்தரப் பிரதேசம், தெலுங்கானா, குஜராத், ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்தவை என கூறப்படுகிறது.
அதன்படி இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்படும் இந்த கலைப் பொருள்கள் மத்திய அரசால் அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் சீர்காழிக்கு அருகில் உள்ள சாயாவனம் கோயிலில் இருந்து திருடப்பட்ட நாயன்மார் சிலைகள் மற்றும் நடனம் ஆடும் நிலையில் இருக்கும் திருஞானசம்பந்தர் சிலைகள் தமிழகத்தை சேர்ந்தவை.
அதேபோல் 12-ஆம் நூற்றாண்டில் வடிவமைக்கப்பட்ட குஜராத் மாநிலத்தை சேர்ந்த துர்க்கை, எருமை மேல் இருப்பது போன்ற காட்சியுடைய மகிஷாசுரமர்தினி கற்சிலையும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஐ.நா.சபை சட்டவிரோதமாக ஒரு நாட்டிலிருந்து திருடப்பட்ட கலை பொருள்கள் மீண்டும் அந்த நாட்டிலேயே திருப்பி ஒப்படைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.