தமிழக அரசியலின் அச்சாணியாக திகழ்ந்த கலைஞரின் அரசியல் வரலாற்றை ஒரு சிறு தொகுப்பாக இச்செய்தியில் காணலாம்.
எழுத்தாளர், வசனகர்த்தா, இலக்கியவாதி தமிழகத்தின் மாபெரும் அரசியல் கட்சியின் தலைவர், தமிழகத்தில் ஐந்து முறை முதலமைச்சராக இருந்து ஆட்சி செய்தவர். தென்முனையில் வள்ளுவருக்கு 137 அடியில் சிலை எழுப்பி தமிழின் புகழை ஓங்கச் செய்த அவர் மறையும் வரை தமிழக அரசியலில் சுழல வைக்கும் அச்சாணியாக இருந்து வந்தவர்தான் முத்தமிழறிஞர் கலைஞர்.
1924ஆம் ஆண்டு ஜூன் மாதம் மூன்றாம் தேதி அன்றைய நாகை மாவட்டம் திருக்குவளையில் பிறந்தார் கலைஞர். திமுகவிற்கு அடையாளமாக இருந்த அதே இந்தி எதிர்ப்புப் போராட்டம்தான் 14 வயதிலேயே கலைஞரை அரசியலில் தீவிரமாக ஈடுபட வைத்தது. நீதிக்கட்சியின் தூண் என வர்ணிக்கப்பட்ட அழகிரிசாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்ட கலைஞர் சிறுவயதிலேயே மாணவர் நேசன் என்ற கையெழுத்து பதிப்புகள் மூலம் அரசியலில் சாட்டையை வீச தொடங்கினார்.
1953ஆம் ஆண்டு டால்மியா நகரத்தை கல்லக்குடி என மாற்றக்கோரி கருணாநிதி தலைமையில் ரயில் தண்டவாளத்தில் படுத்து முழக்கமிட்ட 25 பேரை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக இழுத்து கைது செய்தனர். திமுக வரலாற்றில் முத்திரை பதித்த இந்தப் போராட்டம் கலைஞரை அந்தக் கட்சியின் முக்கிய கள கர்த்தாவாக ஆக்கியது. 1957 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் திமுகவிற்கு மட்டுமல்லாமல், கலைஞருக்கும் முதல் தேர்தல் குளித்தலை தொகுதியில் போட்டியிட்ட கலைஞர் காங்கிரஸ் வேட்பாளர் லிங்கத்தை விட சுமார் 8000 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
1957ஆம் ஆண்டு தொடங்கி 2016ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வரை நடைபெற்ற 13 சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் தோல்வியே காணாத தலைவராக கலைஞர் திகழ்ந்தார். 1969ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த அண்ணாவின் மறைவிற்குப் பிறகு கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்த திமுகவின் தலைவர் பொறுப்பை ஏற்றார் கலைஞர். திமுகவின் உயிர்மூச்சு கொள்கையான சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் முதலமைச்சர் பொறுப்பை ஏற்ற பிறகு குடிசை மாற்று வாரியம், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு, கைரிக்ஷா ஒழிப்பு, நிலச்சீர்திருத்தம் உள்ளிட்ட முன்னோடி திட்டங்களை செயல்படுத்தினார்.
கலைஞர். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வரலாற்றிலேயே 1971ம் ஆண்டு கலைஞர் தலைமையில் திமுக 184 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. திமுகவின் மாநில சுயாட்சிக் கொள்கையை சட்டப்பேரவையில் தீர்மானம் ஆக்கி அழகு பார்த்தார் கலைஞர். இது தவிர பொது வாழ்வில் இருப்போர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் சட்டம் உள்ளிட்டவற்றையும் நிறைவேற்றியவர் கலைஞர். 1989 ஆம் ஆண்டு கலைஞர் தலைமையில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தது.
இந்த காலகட்டத்தில்தான் பெண்களுக்கு சொத்துரிமை மிகப்பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவிகிதத்தை உள்ளிடக்கிய இட ஒதுக்கீடு என பல சாதனைகளை நிகழ்த்தினார் கலைஞர். அன்றைய பிரதமர் வி.பி.சிங்கை வலியுறுத்தி காவிரி நடுவர் மன்றம் அமைத்ததிலும், மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தியதிலும் கலைஞர் முக்கிய பங்காற்றியிருக்கிறார். அறிஞர் அண்ணாவின் வழியிலேயே திரைத்துறையில் இருந்தபடியே அரசியலில் ஈடுபட்டவர் கலைஞர். திமுகவின் சமூக சீர்திருத்தக் கொள்கைகளைப் பரப்பும் ஊடகமாகவும் திரைத்துறையை கையாண்டார்.
இவர் வசனம் எழுதிய மந்திரிகுமாரி பராசக்தி பூம்புகார் மனோகரா போன்ற திரைப்படங்கள் வசூல் சாதனை படைத்தன. ஆட்சியில் இருந்தபொழுது தமிழை செம்மொழியாக நடவடிக்கை எடுத்த கலைஞர் குரலோவியம் மூலம் திருக்குறளுக்கு கதைகளின் வாயிலாக உரை எழுதியிருக்கிறார். அதுமட்டுமின்றி தமிழ் இலக்கணத்தை விளக்கும் தொல்காப்பிய பூங்கா, சங்கத்தமிழ் போன்ற நூல்களை இன்றளவும் மாணவர்கள் விரும்பி பயிலும் வகையில் எளிதாக எழுதியுள்ளார்.
திமுக தலைவராக பொறுப்பேற்ற முதல் கலைஞரை மையப்படுத்திதான் தமிழக அரசியல் நடைபெற்று வந்தது. எதிர்க்கட்சியினராக இருப்பவர்களும் சமூக நீதியைப் பற்றி பேசினால் தான் வெற்றி பெற முடியும் என்ற நிலைக்கு தள்ளியது தான் கலைஞரின் அரசியல் வெற்றி. ஆளும் கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் தமிழ்நாட்டு அரசியலை சொல்ல வைக்கும் அச்சாணியாக அரை நூற்றாண்டுகளாக இருந்தவர் கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.