அருண் ஜெட்லியின் உடல் இறுதி ஊர்வலமாக நிகாம் போத் காட் பகுதிக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் சிறிது நேரத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.
பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி (வயது 66) கடந்த 9-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மதியம் 12: 7 மணியளவில் பலனின்றி காலமானார். இதையடுத்து டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்ட அருண் ஜெட்லி உடலுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர். பிரதமர் மோடி ட்விட்டரில், இரங்கல் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து இன்று காலை டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு அருண் ஜெட்லியின் உடல் கொண்டு வரப்பட்டு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசிய செயற்குழு தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் கட்சி தலைமையகத்தில் அருண் ஜெட்லிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். மேலும் மத்திய அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் மற்றும் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தமிழக பாஜக தலைவர் தமிழிசை மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.அத்துடன் தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி உள்ளிட்டோரும் அருண் ஜெட்லி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பொது மக்கள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்திய பின் பாஜக தலைமை அலுவலகத்தில் இருந்து அருண் ஜெட்லியின் உடல் இறுதி ஊர்வலமாக நிகாம் போத் காட் பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. நிகாம்போத் காட்டில் துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் உள்ளனர். மேலும் கட்சி தொண்டர்கள் உட்பட பல்வேறு தலைவர்களும் அவ்விடத்தில் உள்ளனர். இன்னும் சிறிது நேரத்தில் யமுனை நதிக்கரையில் உள்ள மயானத்தில் இறுதி சடங்குகள் நடத்தப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.