விடா முயற்சியால் போராடி வெள்ளித்திரையில் முத்திரை பதித்து பயணித்துக்கொண்டிருப்பவர் இளம் நடிகர் அருண் விஜய். தொட்டது துலங்கும் என்ற வாசகத்தை 24 ஆண்டு கால போராட்டத்திற்கு பின் நிரூபித்துக் காட்டியிருப்பவர் இந்த கலையுலக நட்சத்திரம்.
நடிகர் விஜய குமாரின் மகனாகப் பிறந்து இன்று தமிழ் சினிமா உலகை திரும்பிப் பார்க்கச் செய்திருக்கிறார். தந்தையால் சினிமா உலகில் அரங்கேறினாலும் தந்தையை மிஞ்சிய தனயனாக உருவெடுத்திருக்கும் அருண் விஜய் 1995இல் வெளியான முறை மாப்பிள்ளை திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
தொடர்ந்து கங்கா கௌரி, துள்ளித் திரிந்த காலம், பாண்டவர் பூமி, இயற்கை, தடையறத் தாக்க, என்னை அறிந்தால், குற்றம் 23, செக்கச் சிவந்த வானம், தடம், சஹோ உள்ளிட்ட வெற்றிப்படங்களில் நடித்து இன்று தமிழ் சினிமா உலகின் வெற்றி நாயகனாக வலம்வருகிறார்.
ஆரம்ப காலங்களில் பெரிதாக பேசப்பட்ட படங்கள் என்று எதுவும் இல்லாதிருந்த காலகட்டத்தில் இவரை வைத்து படம் எடுக்கவே மனமில்லாதிருந்தனர் இயக்குநர்கள் பலர். ஆனால் தனக்குள் இருப்பது சினம் கொண்ட சண்டைக்காரன் என்பது அன்று பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
24 ஆண்டு காலமாக சினிமா துறையில் சாதிக்க வேண்டும் என்ற லட்சிய வெறியோடு தொடர்ந்து போராடி இன்று நமக்கு வாய்ப்பு தரமாட்டாரா என்ற அளவுக்கு உச்சம் தொட்டிருக்கிறார்.
2012ஆம் ஆண்டு அருண் விஜய் நடிப்பில் வெளியான தடையறத் தாக்க திரைப்படமே இவரது சினிமா வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. தொடர்ந்து போராடிய தருணத்தில்தான் உச்ச நட்சத்திரமான நடிகர் அஜித் மூலம் என்னை அறிந்தால் திரைப்படத்தில் விக்டர் மனோகராக வந்து மிரட்டி பிரம்மிப்பை ஏற்படுத்தினார்.
தோற்றம், உடல்மொழியால் பெர்ஃபெக்ட் வில்லன் என்ற அந்தஸ்துடன் அடுத்த அடி வைத்த அருண் விஜய்க்கு தொடர்ந்து ஏறுமுகம்தான். குற்றம் 23, மணி ரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் படங்களில் தோன்றி ராட்சசனாக வளர்ந்திருக்கும் அருண் விஜய் மூடர் கூடம் பட புகழ் நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனியுடன் அக்னி சிறகுகள் படத்தில் நடித்துவருகிறார்.
பாக்ஸர், மாஃபியா, சினம் உள்ளிட்ட படங்கள் திரைக்கு வரவிருக்கும் நிலையில் அருண் விஜய் அடுத்த அதிரடி மூலம் ரசிகர்களுக்கு மிரட்டல் விருந்து கொடுக்க தயார் நிலையில் இருக்கிறார்.