நெல் சேமிப்பு குடோனை திறக்க கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் கோபி மற்றும் அதை சுற்றியுள்ள காசிபாளையம், புதுகரை புதூர், மேவாணி, கள்ளிப்பட்டி, பங்களாப்புதூர், கணக்கம்பாளையம், கரட்டடிபாளையம், கூகலூர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசன வாய்க்கால்கள் மூலம் 25 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராக இருக்கின்றது. இதனால் கோபி பகுதியில் மட்டும் வருடந்தோறும் இருபோக சாகுபடி நடைபெறுகிறது. எனவே ஒவ்வொரு சாகுபடிக்கும் சுமார் 4 லட்சம் மூட்டைகள் வரை நெல் உற்பத்தி செய்யப்படுவது வழக்கமாக இருக்கின்றது. இதன் காரணமாக இந்த பகுதியில் மட்டும் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் வருடந்தோறும் 2 முறை நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன் 13.8 கோடி ரூபாய் மதிப்பில் நாதிபாளையம் கிராமத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பாக ஒருங்கிணைந்த நெல் வணிக வளாகம் 10 ஏக்கர் பரப்பளவில் 3 குடோன்கள் கட்டப்பட்டது. இதை கட்டி முடித்து 3 மாதங்களாகியும் இன்னும் திறக்கப்படவில்லை. இதனையடுத்து தற்போது தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசன பகுதியில் நெல் அறுவடை பணிகள் தொடங்கி உள்ள நிலையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே நாதிபாளையம் கிராமத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நெல் வணிக வளாகத்தை திறக்க கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி அறுவடை செய்யும் நெல்லை விவசாயிகள் இருப்பு வைத்து உரிய விலை கிடைக்கும் போது விற்பனை செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளனர்.