கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் அறுவை சிகிச்சைக்குப்பின் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் பெருங்குடல் பிரச்சனை காரணமாக நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்தார். இதனையடுத்து அவர் கடந்த ஜூலை மாதம் இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள கெமல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதன் பிறகு 10 நாட்கள் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போப் குணமடைந்து வாட்டிகன் திரும்பினார். இந்த நிலையில் அறுவை சிகிச்சைக்குப் பிறகு முதல் முறையாக வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார்.
அதிலும் முதலாவதாக ஹங்கேரி, ஸ்லோவேகியா போன்ற நாடுகளுக்கு நான்கு நாள் சுற்றுப்பயணம் செய்துள்ளார். இதனையடுத்து இன்று அதிகாலை போப் ஹங்கேரி நாட்டின் தலைநகரான புடாபெஸ்ட் சென்றுள்ளார். அங்கு நடைபெறும் நற்கருணை குறித்த உலக மாநாட்டின் நிறைவு விழாவில் பங்கேற்றுள்ளார். இந்த பயணத்தின்போது ஹங்கேரியின் அதிபர், பிரதமர் மற்றும் முக்கிய மதத்தலைவர்களையும் சந்திக்கவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஹங்கேரியின் பிரதமரான விக்டர் ஆர்பன் வலதுசாரிக் கொள்கைகளை தீவிரமாக பின்பற்றுபவர் மேலும் அகதிகள் தொடர்பான போப் பிரான்சிஸின் கருத்துகளுக்கு எதிரானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.