தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டியில் நேற்று முந்தைய தினம் திருவள்ளுவர் சிலை மீது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் மாட்டு சாணம் வீசி அவமரியாதை செய்தனர். இது பல்வேறு தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து திருவள்ளுவரை அவமதிப்பு செய்தவர்களை கண்டித்தும், அவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் பல்வேறு கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றன.
இந்நிலையில் இன்று ராஜராஜசோழன் சதய விழாவிற்கு மாலை அணிவிக்க வந்த, இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் அர்ஜூன் சம்பத் அவமதிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலைக்கு திருநீறு, ருத்ராட்ச மாலை, காவி துண்டு அணிவித்து மரியாதை செலுத்தினார். ஏற்கனவே பாஜக வலைதளத்தில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிந்தவாறு வெளியிட்ட புகைப்படத்தால் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், தற்போது அர்ஜூன் சம்பத் திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு அணிவித்தது மீண்டும் ஒரு பிரச்னையை கிளப்புமோ என்ற அச்சம் நிலவிவருகிறது.