டெல்லியில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி பிரமாண்டமான வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைக்கவுள்ளது. இதனிடையே, ஆம் ஆத்மி அலுவலகத்தின் வெளியே அக்கட்சியின் ஆதரவாளர் ஒருவர் ஒரு பதாகையை ஏந்தி நின்று கொண்டிருந்தார். அதில், 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலைப் பொறுத்தவரை போட்டியானது கெஜ்ரிவாலுக்கும் மோடிக்கும் இடையே என எழுதப்பட்டிருந்தது. 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்கு 4 ஆண்டுகள் உள்ளன. ஆனால், அதற்கான முன்னோட்டம் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளிலேயே எதிரொலித்துள்ளது. மோடிக்கு எதிராக தேசிய அளவில் ஒரு வலுவான தலைவர் இல்லாததே, 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக அபார வெற்றிபெறுவதற்கு முக்கியக் காரணம். தற்போதைய சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சி மட்டுமே 3 மாநிலங்களுக்கும் மேல் சட்டப்பேரவை உறுப்பினர்களை வைத்துள்ளது. கம்யூனிஸ்ட் கட்சி கேரளாவில் மட்டுமே அவ்வாறு உள்ளது. எனவே, ஆம் ஆத்மி வரவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெற்றிபெற்றால் தேசிய அளவில் பெரியத் தலைவராக அரவிந்த் கெஜ்ரிவால் உருவெடுக்க அதிக வாய்ப்புள்ளது என விமர்சர்கள் கருதினர்.
யார் இந்த அரவிந்த் கெஜ்ரிவால்?
ஹரியானா மாநிலம், பிவானியில் 1968ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16-ஆம் தேதி பிறந்த அரவிந்த் கெஜ்ரிவால், தனது பள்ளிப் படிப்பை சோனிபட்டில் உள்ள கிறிஸ்தவ மிஷனரி பள்ளியில் முடித்தார். ஐஐடி நுழைவுத் தேர்வில் 563 மதிப்பெண்களைப் பெற்ற இவர், மெக்கானிக் இன்ஜினியரிங் படிப்பை முடித்தார். 1989ஆம் ஆண்டு, ஜம்ஷெட்பூரில் உள்ள டாடா ஸ்டீல் நிறுவனத்துடன் சேர்ந்து பணியாற்றத் தொடங்கினார். 1992ஆம் ஆண்டு, சிவில் சர்வீஸ் தேர்வுகளில் கலந்து கொள்வதற்காக தனது பணியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். பின்னர், சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றதையடுத்து ஐஆர்எஸ் அதிகாரியாக பதவி ஏற்றுக் கொண்டார். 2006ஆம் ஆண்டு, வருமான வரித் துறையின் இணை ஆணையர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்தார். பின்னர், இவருக்கு புகழ்பெற்ற ரமோன் மகசேசே விருது வழங்கப்பட்டது. இதன்மூலம் கிடைத்த பரிசுத்தொகையை தான் தொடங்கிய ‘Public Cause Research Foundation’ என்ற அமைப்புக்கு கெஜ்ரிவால் நன்கொடையாக அளித்தார்.
2011ஆம் ஆண்டு, அண்ணா ஹசாரே, கிரண்பேடி ஆகியோருடன் சேர்ந்து ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் பணியாற்றத் தொடங்கினார். இந்தச் சம்பவம் அவரின் வாழ்க்கையையே புரட்டிப்போட்டது. ஊழலை ஒழிக்கும் லோக்பால் சட்டத்தை கொண்டு வர அரசியல், அதிகாரம் தேவை எனக் கருதிய கெஜ்ரிவால், அண்ணா ஹசாரேவுடன் மாற்று கருத்து கொண்டார். 2012ஆம் ஆண்டு, நவம்பர் 26ஆம் தேதி ஆம் ஆத்மி என்ற கட்சியைத் தொடங்கினார். கட்சி தொடங்கிய ஒரே ஆண்டில், காங்கிரஸ் கட்சியின் உதவியோடு டெல்லியில் ஆட்சியைப் பிடித்தார். 49 நாட்களில் தனது பதவியை ராஜினாமா செய்தபோது, மக்களின் தீர்ப்பை கெஜ்ரிவால் அவமதித்துள்ளார் என பல்வேறு தரப்பினர் அவரை விமர்சித்தனர். ஆனால், 2015ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 67 இடங்களைக் கைப்பற்றி கெஜ்ரிவால் பதிலடி தந்தார்.
முதலமைச்சராக பதவியேற்றுள்ள அவர், தன்னிச்சையாக செயல்படுவதாக ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் அவருடன் பணியாற்றிய யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷன், குமார் விஸ்வாஸ் ஆகியோர் குற்றஞ்சாட்டினர். பின்னர், அவர்கள் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகினார்கள். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் பெற்ற வெற்றி, நாடு முழுவதும் கட்சியை எடுத்துச் செல்ல அவரைத் தூண்டியது. நகர மக்களின் ஆதரவு அவருக்கு இருந்தபோதிலும், தொண்டர்கள் இல்லாத காரணத்தால் அவரால் டெல்லியைத் தாண்டி கட்சியை வளர்க்க முடியவில்லை.
2017ஆம் ஆண்டு நடைபெற்ற பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் முழுவீச்சூடன் களமிறங்கிய ஆம் ஆத்மி கட்சி, முதலமைச்சர் வேட்பாளராக கெஜ்ரிவாலை அறிவித்தது. பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாகவே அமைந்தன. 117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் சட்டப்பேரவையில், 20 இடங்களில் ஆம் ஆத்மி வெற்றிபெற்றது. புதிதாக தொடங்கப்பட்ட கட்சியான ஆம் ஆத்மி 20 இடங்களைப் பெற்றதே சிறந்த தொடக்கம்தான் என அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்தனர். பஞ்சாபில் உள்ள பிரிவினைவாதிகளுடன் சேர்ந்து ஆம் ஆத்மி கட்சியினர் செயல்பட்டதால்தான், இந்த வெற்றி கிடைத்ததாக சிலர் விமர்சனங்களை முன்வைத்தனர்.
எது எப்படியாக இருந்தாலும், பஞ்சாபில் பெற்ற வெற்றி அவருக்கு நிலைக்கவில்லை. அங்கு ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பல முக்கியத் தலைவர்கள் அக்கட்சியிலிருந்து விலகினர். இது அவருக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்பட்டது. மீண்டும், டெல்லி அரசியலுக்கு முக்கியத்துவம் தந்த அவர், அங்கு பல மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தினார். 2018-19ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், 13,997 கோடி ரூபாய் கல்விக்கு ஒதுக்கப்பட்டது. இது மொத்த நிதி நிலை அறிக்கையில் 26 விழுக்காடாகும்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தால், ஓட்டுநர் உரிமம், திருமண சான்றிதழ் உள்ளிட்டவை வீடுகளுக்கே வந்து அளிக்கப்படுவது டெல்லி மக்களைப் பெரிதாகவே கவர்ந்தது. குறைந்த விலையில் மின்சாரம், இலவச குடிநீர் ஆகியவை அடித்தட்டு மக்களிடம் கெஜ்ரிவாலை கொண்டுபோய் சேர்த்தது.
ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் மறைந்த கோஃபி அன்னான் ஆம் ஆத்மி கட்சி அறிமுகப்படுத்திய ஆரம்ப சுகாதார நிலையத்தை வெகுவாகப் பாராட்டினார். 1,700 அங்கீகாரமில்லா குடியிருப்புகளுக்கு பட்டா வழங்கியது, இலவச வைஃபை திட்டம், மாசுவைக் கட்டுப்படுத்தும் விதமாக முன்னெடுக்கப்பட்ட ஆட் ஈவன் திட்டம் உள்ளிட்டவை, ஆம் ஆத்மி கட்சியை மற்ற கட்சிகளைக் காட்டிலும் முன்னிலையில் நிற்க வைத்தது.
திட்டங்களை செயல்படுத்தியது மட்டுமில்லாமல், பல அரசியல் நகர்வுகளை சாதூர்யமாக நகர்த்தி, மோடிக்கு எதிராக சிம்மசொப்பனமாக திகழ்கிறார், அரவிந்த் கெஜ்ரிவால். காஷ்மீர் சிறப்பு அந்தஸ்துக்கு ஆதரவு, ராமர் கோயில் விவகாரம், குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்டவற்றில் மெளனம் என தேர்ந்த அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்து தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார். தேசிய அளவில் மோடியை எதிர்ப்பதற்கு வலுவான தலைவர்கள் இல்லாத சூழ்நிலையில், மற்ற மாநிலங்களில் ஆம் ஆத்மி வளர்ச்சி கண்டால், அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு மாற்றுத் தலைவராக மாற வாய்ப்புள்ளது.