கொரானா வைரஸ் எதிரொலியாக பல நாடுகளில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் சுமார் 30 கோடி மாணவர்கள் வீடுகளுக்குள் முடங்கி இருக்கின்றனர்.
சீனாவில் இருந்து பரவத்தொடங்கிய கொடிய கொரோனா உலகையே கதி கலங்க செய்துள்ளது. இந்தியா, அமெரிக்கா உட்பட 80 நாடுகளில் பரவி கொரோனா மிரட்டி வருகின்றது. இதுவரையில் கொரோனா தாக்குதலுக்கு 3,285 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் 95, 332 பேர் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அனைத்து நாடுகளுமே மேலும் பரவாமல் இருக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் எதிரொலியின் காரணமாக மொத்தம் 13 நாடுகளில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக யுனெஸ்கோ (UNESCO) அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் 9 நாடுகளில் தொற்று பாதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் பள்ளிகளை மூடியுள்ளதாக கூறியுள்ளது. இதனால் மொத்தம் 30 கோடி மாணவர்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர்.
இதுகுறித்து யுனெஸ்கோ தலைவர் ஆட்ரே அசோலே (Audrey Azoulay) கூறுகையில், நெருக்கடியான நேரங்களில் பள்ளிகளை எல்லாம் மூடுவது புதியது அல்ல என்றாலும், தற்போது மாணவர்களின் படிப்பு முடங்குவது முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கொரோனா வேகமாக இருப்பதால், மாணவர்களின் கற்பிக்கும் உரிமைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என கவலை தெரிவித்துள்ளார்.
சீனாவில் பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ள நிலையில், இத்தாலியில் பள்ளிகள் வரும் 15 ஆம் தேதி வரையும், தென் கொரியாவில் 23 ஆம் தேதி வரையும், ஜப்பான் மற்றும் பிரான்சில் ஏப்ரல் மாதம் வரையிலும் மூடப்பட்டன.