நிர்பயா குற்றவாளி பவன் குப்தா மனு மீதான விசாரணை 6 ஆம் தேதி நடைபெற உள்ளதால், அறிவித்தபடி குற்றவாளிகள் 4 பேரும் மார்ச் 3 ஆம் தேதி தூக்கிலிடப்பட மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.
டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிர்பயா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் ஓட்டு மொத்த இந்தியாவையே உலுக்கியது. இந்த கொடூர சம்பவம் தொடர்பாக ஓட்டுநர் ராம் சிங், பவன் குமார் குப்தா, அக்சய் தாகூர், முகேஷ் சிங், வினய் ஷர்மா மற்றும் ஒரு சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் ராம்சிங் சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டான். மேலும் சிறுவன் 3 ஆண்டு சிறைத்தண்டனைக்கு பிறகு விடுவிக்கப்பட்டான்.
இந்நிலையில் மீதமுள்ள குற்றவாளிகள் 4 பேர் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்த வழக்கு 8 ஆண்டுகள் கடந்து நடைபெற்று வருகின்றது. சமீபத்தில் நால்வருக்கும் இரண்டு முறை தூக்கு தண்டனை தேதி அறிவிக்கப்பட்டு பின் தள்ளிப்போனது. காரணம் குற்றவாளிகள் 4 பேரும் மாறி மாறி சீராய்வு மனு, கருணைமனு என சட்ட வாய்ப்புகளை பயன்படுத்தினர். இந்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இறுதியில் மார்ச் 3 ஆம் தேதி நால்வருக்கும் தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது மீண்டும் நிர்பயா குற்றவாளியில் ஒருவனான பவன் குப்தா மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளான்.
வருகின்ற 6 ஆம் தேதி இந்த மனு விசாரிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டாலும், உடனே அவன் அடுத்த கட்டமாக குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அளிப்பான் என எதிர்பார்க்கப்படுகிறது.அதன்மீது நடவடிக்கை விரைவாக எடுக்கப்பட்டாலும், 14 நாட்களுக்குப் பிறகு தண்டனையை செயல்படுத்த முடியும். எனவே நிர்பயா குற்றவாளிகளின் மரண தண்டனை மார்ச் 20 ஆம் தேதி வரை தள்ளிப்போகும் என்று கூறப்படுகிறது. விரைவில் தூக்கு தண்டனை கிடைக்குமா என்று ஓட்டு மொத்த இந்தியாவும் காத்து கொண்டிருக்கிறது.