Categories
உலக செய்திகள்

கொரோனாவின் வேட்டை… 5 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை… பல நாடுகளில் கல்வி நிறுவனங்கள் மூடல்!

கொரோனா வைரசால்  பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில், பல நாடுகளில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு, பொது நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

உலகளவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. 1 லட்சத்து 35 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த மாதம் சீனாவில் கொரோனாவால் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், அதன் தாக்கம் தற்போது பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 80 ஆயிரம் பேரில் 63 ஆயிரம் பேர் சிகிச்சையின் பின்னர் குணமாகி மீண்டு வந்துள்ளனர். இதுவரை, 3, 170 பேர் இறந்துள்ள நிலையில் நேற்று ஒருவர் மட்டுமே கொரோனாவிற்கு பலியாகி இருக்கிறார். மேலும் புதிதாக 4  பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், ஐரோப்பாவின் சில நாடுகளில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. உலக சுகாதார அமைப்பு உலகளாவிய தொற்றுநோய் என்று அறிவித்ததிலிருந்து, பல்வேறு நாடுகளில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளது. எல்லைகள் மூடப்பட்டு பெரும்பாலான நாடுகளில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகின்றன. கொரோனா பீதியின் காரணமாக அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் முக்கிய வணிக நிறுவனங்கள், சந்தைகள் மற்றும் கடைகள் வெறிச்சோடி காணப்படுகின்றது.

இத்தாலியில் பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டி சென்று விட்டது. அந்நாட்டில் மேலும் 15 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு அடுத்தப்படியாக இத்தாலி தான் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.  போர்ச்சுகல் அரசும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை நாட்களை  அறிவித்துள்ளது. பிரான்ஸ், இஸ்ரேல், துருக்கி, நோர்வே உள்ளிட்ட பல நாடுகளும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளன.

அமெரிக்காவின்  வாஷிங்டன் மற்றும் நியூயார்க் நகரங்களில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களின் எதிர்காலம் குறித்து பெற்றோர்கள் கவலை கொண்டுள்ளனர். குழந்தைகள் விளையாடும் பூங்காக்கள் மற்றும் மிருகக்காட்சி சாலைகள் ஆகியவையும் வெறிச்சோடி காணப்படுகின்றன.

நியூயார்க்கின் மிகவும் பிரபலமான பிராட்வே அரங்கம் ஒரு சுற்றுலா பயணிகளின் மனம் கவர்ந்த ஒரு நாடக அரங்காகும். இங்கு அனைத்து நிகழ்ச்சிகளும் அடுத்த ஒரு மாதத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளன. இதேபோல், கலிபோர்னியாவின் டிஸ்னிலேண்ட் பூங்கா இந்த சனிக்கிழமை முதல் கொரோனா பீதியின் காரணமாக மூடப்படுகிறது.

கொலம்பியா தனது துறைமுகத்திற்கு வெளிநாட்டு கப்பல்கள் வருவதற்கு தடை விதித்துள்ளது. மே 30 வரை அந்நாட்டில் சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்த கிராண்ட் பிரிக்ஸ் ஃபார்முலா ஒன் கார் ரேஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

 

Categories

Tech |