திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் பகுதியில் 17 வயதுடைய பிளஸ்-2 மாணவி தனது தந்தையுடன் வசித்து வருகின்றார். இவரது தந்தை சற்று மனநலம் குறைந்தவர் என்று கூறப்படுகின்றது. எனவே மாணவியின் தாயார் வெளியூரில் தங்கி வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் மாணவியுடன், மார்த்தாண்டம் ஆர்.சி.தெருவைச் சேர்ந்த அபி என்ற வாலிபர் பழகி இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உன்னை திருமணம் செய்து கொள்வதாக மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி அபி தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அதன்பின் அபி தன்னை திருமணம் செய்து கொள்வதாக மாணவி நம்பிக்கையுடன் இருந்து வந்தார். இந்நிலையில் மாணவியை ஏமாற்றிவிட்டு அபி வேறொருரு மாணவியுடன் ஓடி விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த பிளஸ்-2 மாணவி மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி காவல்துறையினர் அபி மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதேநேரத்தில் அபியுடன் ஓடிய மாணவியின் தாயாரும் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகாரில் 10-ம் வகுப்பு படித்து வரும் எனது மகளை அபி கடத்தி சென்று விட்டதாக தெரிவித்துள்ளார். அதன்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது கடத்தப்பட்ட மாணவியை, அபி தன் வீட்டிலேயே தங்க வைத்து இருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது. அதன்பின் காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அபியை கைது செய்ததோடு மாணவியை மீட்டனர். அதன்பிறகு 2 மாணவிகளையும் மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.