புதுக்கோட்டையில் சுபநிகழ்ச்சிகளை நடத்துவதற்கு முன் உரிய அனுமதி பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு 5வது கட்ட நிலையில் தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் மட்டும் பொது முடக்கம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, பல பகுதிகளில் ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த சமயத்தில் சுப நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றில் ஐம்பதுக்கும் குறைவான நபர்களை வைத்து நடத்த வேண்டும் என அரசு அறிவுறுத்தி இருந்தது.
ஏனெனில் அதிகம் கூட்டம் கூடுவதால் கொரோனா பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதால், மண்டபங்களை புக் செய்யக்கூடாது, 50-க்கும் குறைவானவர்களே வைத்து சுப நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அதற்கும் ஒருபடி மேலாக முக்கிய அறிவிப்பை அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
அதில், சுப நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் எனில் ஊரக, நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற்றபின் தான் நடத்த வேண்டுமெனவும், அதிகமான கூட்டம் கூடுவதை முன்கூட்டியே தவிர்க்கும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.