பிரபல சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன். இவர் சிரிச்சா போச்சு என்ற நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் பெண் வேடமிட்டு காமெடி செய்வதில் திறமைசாலி. இவரும் சூர்யா தேவி என்ற பெண்ணும் நடிகை வனிதாவின் மூன்றாம் திருமணம் குறித்து தொடர்ந்து சர்ச்சையான கருத்துக்களை யூடியூபில் கூறிவந்த நிலையில் நடிகை வனிதா போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் சூர்யா தேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் ஜாமினில் வெளியே வந்த அவர் நாஞ்சில் விஜயன் வீட்டிற்கு சென்று பேசியுள்ளார். அதாவது 6 வருடங்களாக என்னுடன் நட்பாக பழகி வந்த நிலையில் திடீரென வனிதாவுடன் சமரசம் செய்து கொண்டது எதற்காக என்று கேட்பதற்காக சூர்யா தேவி நாஞ்சில் விஜயன் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது நாஞ்சில் விஜயன் சூர்யா தேவியை தகாத வார்த்தைகளால் பேசியதோடு ஒரு கட்டையால் அவரை சரமாரியாக அடித்து தாக்கியுள்ளார். இதில் சூர்யா தேவியின் மண்டை உடைந்து ரத்தம் வழிந்துள்ளது. இது தொடர்பாக சூர்யா தேவி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், ஐந்து பிரிவுகளின் கீழ் நாஞ்சில் விஜயன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் ஒருமுறை கூட விசாரணைக்கு நாஞ்சில் விஜயன் ஆஜராகவில்லை. இதன் காரணமாக வளசரவாக்கம் காவல்துறையினர் நாஞ்சில் விஜயனை இன்று கைது செய்துள்ளனர். மேலும் இவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.