அதிமுக கட்சியில் தற்போது ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்த நிலையில், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தலைமையை பிடிப்பதற்காக தீவிரம் காட்டி வரும் நிலையில், அதிமுக தொடர்பான பிரச்சனை நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் இருக்கிறது. ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டதோடு, சபாநாயகருக்கும் ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில் அதிமுகவின் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை ஆர்பி உதயகுமாருக்கு வழங்கப்பட்டதாகவும், சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையை ஆர்வி உதயகுமாருக்கு ஒதுக்க வேண்டும் எனவும், ஓபிஎஸ்-க்கு வேறு இடத்தில் இருக்கையை ஒதுக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதேபோன்று ஓபிஎஸ்-ம் ஒரு கடிதம் எழுதி சபாநாயகருக்கு அனுப்பி இருந்தார்.
அதில் தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் எனவும், என்னை கேட்காமல் யாருக்கும் எதிர்கட்சித் தலைவர் அந்தஸ்தை கொடுக்கக் கூடாது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த கடிதங்கள் குறித்து சபாநாயகர் இதுவரை எந்த ஒரு முடிவும் எடுக்காத நிலையில், இன்று பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு இடையில் காலை 10 மணி அளவில் சட்டசபை கூட்டம் தொடங்குகிறது.
மேலும் சட்டசபை கூட்டத்தொடரின் போது எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை மற்றும் ஓபிஎஸ்-க்கு எங்கு இருக்கை ஒதுக்கப்படும் என்று எதிர்பார்ப்பு தான் தற்போது அதிகரித்துள்ளது. இதுகுறித்து ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தங்களுடைய ஆதரவாளர்களிடம் தீவிர ஆலோசனை நடத்தியுள்ளனர். எனவே இன்று காலை 10 மணிக்கு சட்டசபை கூட்டம் தொடங்கும் போதே பரபரப்பான சூழ்நிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.